Sunday, January 9, 2011

தொடர்வண்டிப் ப‌ய‌ண‌ம்


வெண்ணிலவு வீடு திரும்ப‌
கதிரவன் கண்விழிக்கும்
சாயல் படர‌...
விடிந்தும் விடியாமலும்
இருந்த அந்தக்
காலைப் பொழுதில்
முத்துமுத்தாய்ப் படர்ந்த‌
பனித்துளிகளில் நனைந்த‌
வயல்வெளிகளும்...
விறைத்து நிற்கும்
காவலர்களைப்போல்
இருபுறமும் அணிவகுத்து
நிற்கும் மரங்களும்...
மீனவன் வலையில்
அகப்படாது பிழைக்க‌
இங்கும் அங்கும் நீந்தும்
உயிர் போராட்டத்தை
தன்னுள் மறைத்து
அமைதியையே ஒலமிடும்
நீரோடைகளும்...
கதிரவனின் பார்வை பட்டு
மொட்டவிழ காத்து நிற்கும்
தாமரைகள் நிரைந்த‌
தடாகங்களும்...
குஞ்சுகளைக் கூட்டில் விட்டு
நீர்நிலைகளை நாடி
கூட்டங்கூட்டமாய் பறக்கும்
பறவைகளும்...
மேகங்களுடன் ரகசியம் பேசும்
உயர்ந்த மலைகளுமாக‌...
மெல்லியதாய் ஒளிபடர்ந்து
சிலுசிலிர்த்து வீசும் காற்றை
சீறி ஊடுருவும்
தொடர் வண்டியின்
இதமான தாலாட்டில்
பயணித்தேன்...!
அந்தக் காலைப்பொழுதில்
ஒன்ற‌ன்பின் ஒன்றாக‌
இக்காட்சிக‌ளை ர‌சித்த‌ப‌டியே...
தொடர்வண்டியிலே
தொடருது என் பயணம்...!

- பிரதீபா புதுச்சேரி (bradipagen@yahoo.co.in)

#நன்றி
முத்துக்கமலம் இணைய இதழ்(http://www.muthukamalam.com/muthukamalam_kavithai317.htm
பதிவுகள் இணைய  இதழ்(http://www.geotamil.com/pathivukal/poems_september2009.htm)

2 comments:

  1. பயணங்களில் ஒரு ரசிகையின் அழகான அவதானிப்புகள்... உங்கள் கவிதை படிக்கையிலேயே பயணம் செய்ய வைக்கிறது...

    ReplyDelete
  2. தங்களின் பாராட்டிற்கு மிக்க‌ நன்றி

    ReplyDelete